சிறுநீரிலிருந்து உரம்!


எதற்கும் பயனில்லாத கழிவாகத் தான், இன்றும் மனித சிறுநீரை உலகம் பார்க்கிறது. ஆனால், சிறுநீரில் இருக்கும் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற செறிவான சத்துக்கள், நல்ல உரமாக இருக்க முடியும் என்கிறது, அறிவியல்.

இதை நடைமுறைப்படுத்த, ஐரோப்பிய கடல் கண்காணிப்பு அமைப்பு (இ.ஓ.ஓ.எஸ்.,) குளியலறை கலன்களை தயாரிக்கும் லாபென், சுவிட்சர்லாந்து நீர் ஆராய்ச்சி நிலையம் (இ.ஏ.டபிள்யூ.ஏ.ஜி.,) ஆகிய மூன்று அமைப்புகளும் கூட்டாக ஆராய்ந்தன.

இறுதியில், கழிப்பிடங்களில் சிறுநீரை மட்டும் பிரித்து, மடைமாற்றிவிடும் கலனை லாபென் மற்றும் இ.ஓ.ஓ.எஸ்., ஆகியவை வடிவமைத்தன. ஒருவர் சிறுநீர் கழித்ததும், கலனை சுத்திகரிக்க வெறும், 1.5 லிட்டர் தண்ணீரே போதும்.

கலனிலிருந்து பிரித்தெடுத்த சிறுநீரை, கிருமிகள் இன்றி சுத்திகரித்து, உரத்திற்கு தேவையான சத்துக்களை வடிகட்டும் கார்பன் வடிகட்டிகளை இ.ஏ.டபிள்யூ.ஏ.ஜி., உருவாக்கியது.இந்த முறையில் தயாரிக்கப்படும் உரத்திற்கு, 'ஆரின்' என, பெயரிட்டுள்ளனர்.

ஆரின் உரத்தை எல்லா வகை செடிகளுக்கும் போடலாம் என, சுவிஸ் அரசின் வேளாண்மைத் துறை, சான்று வழங்கியிருக்கிறது. பொதுக் கழிப்பிடங்களை உரத் தொழிற்சாலையாக மாற்றும் இந்த திட்டம், நம் ஊருக்கும் வருமா?

Post a Comment

Previous Post Next Post