கோபத்தை தணிக்க 5 வழிகள்!


நீண்ட வரிசையில் காத்திருத்தல், அலுவலகங்களில் சக ஊழியர்களிடமிருந்து வரும் வார்த்தை பிரயோகங்கள், போக்குவரத்து நெரிசலில் வாகனம் ஓட்டுதல் போன்ற அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் கோபமாக மாறிவிடுகிறது. இவை உங்கள் சிந்தனையை ஆட்டிப்படைக்கும் போது, உங்கள் கோபமும் ஆத்திரமும் மேலும் வலுவடைகிறது.

உங்கள் கோபத்தை வெளிக்காட்ட முயல்வது பெரும்பாலும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள உறவுகளையும், ஏன் உங்கள் தொழிலையும் கூட பாதித்துவிடலாம். அதிகளவு கோபம் உங்கள் உடல் நலத்தையும் பாதிக்கும்.

அதற்காக கோபத்தை அடக்கி வைப்பதும் உடல்/உள நலத்திற்கு அவ்வளவு நல்லதல்ல என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள்.

சரி அப்படியென்றால் கோபம் வரும் போது எப்படி அதில் இருந்து விடுபடுவது என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

திடீர் என கோபம் ஏற்படும் போது இந்த ஐந்து வழிமுறைகளையும், முடிந்தால் ஒன்றையேனும் முயற்சித்துப் பாருங்கள்.

01. ஆழமாக மூச்சு விடுங்கள்

உடனே கோபம் வரும் போது ஆழமாக மூச்சு விடுங்கள். உங்கள் உடலுக்கு வசதியாக ஓர் இடத்தில் ரிலாக்ஸ் ஆக சற்று அமர்த்துக்கொள்ளுங்கள். அமர்ந்தவாறே நீங்கள் மூச்சுவிடுவதை கவனியுங்கள். இவ்வாறு அமர்ந்து ஆழமாக மூச்சு விடும் போது உங்கள் கோபம் சற்று உங்களை விட்டு தள்ளிப் போகும்.

02. இடத்தை மாற்றுங்கள்.

திடீர் என கோபம் ஏற்படும் போது நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு விலகி சென்றுவிடுங்கள். அல்லது நீங்கள் இருக்கும் சூழலை மாற்றிவிடுங்கள்.

இவ்வாறு செய்வதால் நீங்கள் சிலவேளைகளில் உங்களுக்கு கோபம் ஏற்படுவதற்கான காரணத்தையும் நீங்கள் விட்டு விலகி சென்றிருப்பீர்கள். எனவே புதிய இடத்தில அல்லது சூழலில் உங்கள் மனநிலை மாறிவிட வாய்ப்புள்ளது.


03. அழகிய கற்பனை உலகினுள் பிரவேசியுங்கள்.

திடீர் என கோபம் ஏற்படும் போது உங்களுக்கு வாழ்க்கையில் பிடித்த ஓரிடத்தை பற்றிய கற்பனைக்குள் சென்றுவிடுங்கள். அது நீங்கள் வாழ்நாளில் சென்ற மிக அழகிய இடமாகவும், உங்களுக்கு பிடித்த உங்கள் மனதில் பதிந்த அழகிய இடமாகவும் இருக்கலாம். அல்லது நீங்கள் மனதினுள் கற்பனை செய்துகொண்டிருக்கும் ஓர் அழகிய இடமாகவும் இருக்கலாம்.

அந்த அழகிய இடத்தில் உங்கள் அனுபவத்தை ஒரு முறை மீட்டிப் பாருங்கள். இதனால் உங்களை மறந்து உங்கள் கோபத்த சற்று இழந்துவிடுவீர்கள்.

04. நகைச்சுவையான விடயங்களில் கவனம் செலுத்துங்கள்.

கோபத்தில் இருக்கும் போது முடியுமென்றால் உங்கள் மனதுக்கு நகைச்சுவையான விடயங்களில் கவனம் செலுத்த முயலுங்கள். அல்லது அவ்வாறான ஒரு நகைச்சுவையான விடயத்தை பற்றி நினைத்துப்பாருங்கள். அது சிலவேளைகளில் நீங்கள் வாழ்நாளில் அதிகளவு வாய்விட்டு சிரித்த விடயமாகவும் இருக்கலாம்.

இவ்வாறு நகைச்சுவையான விடயங்களில் கவனம் செலுத்தும் போது உங்களை அறியாமலே உங்கள் கோபம் உங்களை விட்டு தணிந்து செல்லும்.

05. வாழ்வில் நீங்கள் செய்த நல்லவற்றையும் உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்களையும் எண்ணிப்பாருங்கள்.

நிறைய நேரங்களில் உங்களுக்கு கோபம் ஏற்படுவதற்கு காரணம் யாரோ ஒருவர் உங்களுக்கு செய்த தவறு அல்லது உங்களை தவறாக பேசியதாக இருக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் வாழ்வில் செய்த நல்லவற்றையும், உங்களுக்கு கிடைத்த பாராட்டுகளையும் எண்ணிப்பாருங்கள்.

யார் என்ன கூறினாலும் இறைவன் உங்களை காரணமில்லாமல் இந்த உலகிற்கு அனுப்பவில்லை என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். உங்களுக்கும் ஓர் தனிப்பட்ட அழகிய வாழ்க்கை இருக்கும். அவ்வாறான விடயங்களில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். அதனால் உங்கள் கோபம் உங்களை விட்டு தூர சென்றுவிடும்.

திடீர் என கோபம் ஏற்படும் போது மேற்கண்டவற்றை சற்று நினைவில் வைத்து முயற்சித்துப் பாருங்கள், உங்கள் கோபம் ஏதோ ஒரு வழியில் தணிந்துவிடும்.
Previous Post Next Post