சீனாவின் வுஹான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தினந்தோறும் பல உயிர்களை காவுகொண்டுவரும் கொரோனா வைரஸ் காரணமாக உலக சுகாதார அமைப்பினால் உலகளாவிய ரீதியில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
உலக சுகாதார அமைப்பினால் COVID-19 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் நோயினால் மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும் 211 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தாக்கம் ஈரான் நாட்டினை மையமாக வைத்தே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஈரான் நாட்டுக்கான விமானப் பயணங்களை ஐக்கிய அரபு இராச்சியம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மையப்புள்ளியாக கருதப்படும் ஈரானில் மட்டும் இதுவரையில் 19 மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும் 139 பேர் இதன் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.