அமிதாப் பச்சன் ஒரு திரைப்பட நடிகராக அறிமுகமாகி கொடிகட்டிப் பறந்த காலமது. இந்தியா மாற்றுமன்றி உலகளவில் நடிப்புத் துறையில் அவருக்கென ஒரு தனிப் பெயரே இருந்தது. இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் நடிகர் அமிதாப் பச்சன் பற்றி தெரியாதவர்கள் என்று யாரும் இருக்கவில்லை.
ஒரு நாள் விமானப் பயணத்தின் போது விமான நிலையத்திலும் சரி, விமானத்தில் ஏறும் வரையிலும் சரி, ரசிகர்களின் வரவேற்பில் குறைவிருக்கவில்லை. இதை அமிதாப் பச்சன் எதிர்பார்த்தே இருந்தார். எப்படியும் ஆட்டோகிராப் கேட்டு வருவார்கள் எனத் தெரிந்து தயாராகவே இருந்தார். அவ்வாறே பலரும் அமிதாப் பச்சனை நேரில் கண்டுகொள்ளவும், ஆட்டோகிராப் வாங்கவும் வரிசையில் இருந்தார்கள். இதை எல்லாம் முடித்துவிட்டு விமானத்தில் ஏறச் சென்றார் அமிதாப் பச்சன். அங்கேயும் நிலமை அப்படியே இருந்தது.
விமானத்தில் பிசினஸ் கிளாஸில் பயணித்த அமிதாப் பச்சனுக்கு அருகாமையில் பயணித்த ஒரு இந்தியர் மட்டும் அவரை கண்டுகொள்ளவே இல்லை. அந்த நபர் மட்டும் அவர் பாட்டுக்கு ஒரு சஞ்சிகையை படித்தவண்ணம் இருந்தார். பயணம் முடியும் வரை எதுவும் பேசவில்லை. தன்னுடன் கதைக்கவும் ஆட்டோகிராப் வாங்கவும் பலரும் முந்தியடித்துக்கொண்டு வரும் ஒரு காலகட்டத்தில் யார் இந்த மனிதர் தன்னைக் கண்டுகொள்ளவே இல்லையே என அமிதாப் பச்சனுக்கோ பெரும் ஆச்சரியம்.
பொறுமையை இழந்த அமிதாப் அவருடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தார். "ஹலோ சார்" என்ற அமிதாப்பின் வார்த்தைக்கு "ஹாலோ சார்" என புன்முறுவலுடன் ஒரு பதில் கிடைத்தது. அமிதாப் இன்னும் கொஞ்சம் பேச்சுக்கொடுத்தார். அமிதாப் பச்சனுடன் அந்த நபரும் சாந்தமான முறையில் பேச்சுக்கொடுத்தார்.
இடையில் "சார் நீங்கள் திரைப்படங்கள் பார்ப்பதுண்டா?" என அமிதாப் கேட்க "ஆம் பார்க்க நேரம் கிடைத்தால் பார்ப்பேன்" என்று அந்த நபர் பதில் கூறுகிறார். "அப்போ உங்களுக்கு என்னை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை" என அமிதாப் அவரிடம் கேட்கிறார்.
அவரோ சற்று யோசித்துவிட்டு, "எனக்கு அந்தளவுக்கு தெரியாது" என்று கூறுகிறார். அமிதாப் பச்சனுக்கோ மேலும் ஆச்சரியம். அமிதாப் பச்சன் ஒரு நடிகராக பிரபல்யம் அடைந்த பின்னர் தன்னை யார் என்று ஒருவருக்கு, அதுவும் ஒரு இந்தியருக்கு அறிமுகப்படுத்திக்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
"நான் தான் நடிகர் அமிதாப் பச்சன், நீங்கள் என் பெயரை கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்."
"ஓஹ் அப்பிடியா உங்கள் பெயரை எங்கோ கேள்விப்பட்டது போன்ற நினைவுண்டு, இருந்தாலும் அந்தளவுக்கு தெரியாது" என மீண்டும் புன்முறுவலுடன் "உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்கிறார்" அந்த நபர்.
"ஆஹ் அப்படியா" என்ற அமிதாப் பச்சனுக்கு மனதுக்குள் ஏதோ ஒரு பெரும் ஏமாற்றம் போன்ற உணர்வு இருந்தது. காரணம், தான் ஒரு பெரும் நடிகராக புகழ்பெற்ற பின்னர் தன்னைத் தானே ஒருவருக்கு அறிமுகப்படுத்திக்கொண்டது இதுவே முதல் தடவை.
அவர்கள் பயணித்த விமானமும் அதன் முடிவிடத்தை வந்தடைந்துவிட்டது. தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் இருந்த அமிதாப் பச்சனுக்கு தன்னை யார் என்று தெரியாது என்று கூறிய நபரின் பெயரைக் கூட கேட்க மறந்துபோய்விட்டது.
"அப்போ சார், நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன?" என்று கேட்ட அமிதாப் பச்சனுக்கு கிடைத்த பதில் அவரை பெரும் திகைப்பில் ஆழ்த்தியது.
"ஓஹ் சொல்ல மறந்துட்டேன், என் பெயர் ஜே.ஆர்.டி டாடா, உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி மிஸ்டர் அமிதாப்" என்பதே அமிதாப் பச்சனுக்குக் கிடைத்த பதில்.
அப்படியென்றால் இன்றளவில் அமெரிக்க டாலரில் 100 பில்லியன்களைத் தாண்டியும் சொத்துக்களைக் கொண்டிருக்கும் உலகின் அதிகூடிய வருமானம் பெரும் நிறுவனங்களில் 60 ஆவது இடத்தில் இருக்கும் டாடா (TATA) நிறுவனத்தின் உரிமையாளரே இந்த ஜே.ஆர்.டி டாடா.
அன்று அமிதாப் பச்சன் பயணித்துக்கொண்டிருந்த விமானம் கூட ஜே.ஆர்.டி டாடாவுடைய TATA நிறுவனத்துக்கு சொந்தமானது தான்.
பிறகொரு காலத்தில் அமிதாப் பச்சன் தனது இந்த அனுபவத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது இவ்வாறு கூறியிருந்தார்.
"நாங்கள் உலகில் பெரும் கலைஞர்களாக இருக்கலாம், பெரும் பலம் வாய்ந்த மனிதர்களாக இருக்கலாம், எங்களை அறியாதவர்களே இல்லை என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம், ஆனால் எங்களை விட பலம் வாய்ந்த மனிதர்கள், பெரும் கலைஞர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கைப் பயணத்தில் என்றோ ஒருநாள் நாம் அனைவரும் எங்களை விட பெரிய கதாபாத்திரங்களை கட்டாயம் சந்திப்போம். அப்போதே அந்த உண்மை எமக்குப் புலப்படும்."
Post a Comment