வடகிழக்கு டெல்லியில் நடந்துவரும் குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிரான போராட்டங்களின் போது இடம்பெற்றுவரும் வன்முறைகளில் இதுவரையில் 21 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் 1 பொலிஸ் உத்தியோகத்தரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் இடம்பெற்ற இந்த வன்முறையின் போது வீடுகள், வியாபார நிலையங்கள் என்பன குறிவைத்து தாக்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கல்வீச்சுத் தாக்குதல்களினால் பெருமளவு சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வன்முறை சம்பவங்களின் போது ஒரு மசூதியும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில், குறிப்பாக டெல்லியில் டொனால்ட் டிரம்ப் தங்கியிருக்கும் போது இவ்வன்முறை சம்பவங்கள் இடம்பெறுவது, சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இவ்வன்முறை சம்பவங்கள் தன்னை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளதாகவும், சமாதானத்தையும், அமைதியையும் நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணையவேண்டும் என நேற்று இடம்பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் அவசர சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.