கடும் மழையில் அணைந்துவரும் அவுஸ்திரேலிய காட்டுத் தீ!


சென்ற வருடம் செப்டெம்பர் மாதம் தொடக்கம் அவுஸ்திரேலியாவின் சுமார் 10 மில்லியன் நிலப்பரப்பை காட்டுத் தீ நாசம் செய்தது. இதில் அகப்பட்டு சுமார் 100 கோடி அல்லது ஒரு பில்லியன் விலங்குகள் அழிந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

தொடர்ந்து சில மாதங்களாக பரவிய காட்டுத்தீயினால் குறைந்தபட்சம் 30 பேர் உயிரிழந்துள்ளதோடு, 2000 பேர் வரை தங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளனர்.

எனினும் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பரவி வந்த காட்டுத் தீ அணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 4 நாட்களில் பெய்த கடும் மழையில் மட்டும் சிட்னி நகரில் 390 mm இற்கும் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், 20 வருடங்களின் பின்னரே இவ்வாறன மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் சிட்னி நகரை அண்மித்துள்ள ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இக்கடும் மழை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், தொடர்ந்து மழை பெய்யுமெனின் அவுஸ்திரேலியாவின் ஏனைய பகுதிகளில் பரவி வரும் காட்டுத் தீயும் முற்றாக அணைந்துவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
أحدث أقدم