உலக சுகாதார அமைப்பின் படி, தற்போது கொரோனா வைரஸ் தக்கத்துக்குள்ளான புதிய சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளது சீனாவுக்கு வெளியில் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் இதன் தாக்கம் சற்று குறைந்து செல்லும் நிலையினை அவதானிக்க முடிந்ததெனினும், சீனாவுக்கு வெளியில் மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐரோப்பா:
ஐரோப்பாவில் அதிகளவில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளான நாடு இத்தாலி என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய நாடுகளில் பதிவான கொரோனா வைரஸ் தாக்கங்களில் பெரும்பாலானவை இத்தாலி நாட்டிற்கு சென்று வந்தவர்கள் மூலமே பதிவாகியுள்ளன. இத்தாலி நாட்டில் மட்டும் 374 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு குறைந்தபட்சம் 12 மரணங்கள் பதிவாகியுள்ளன.
நோர்வே, அல்ஜீரியா, குரைஷியா, ஸ்பெயின் மற்றும் சுவிற்சர்லாந்து என்பன தமது நாட்டின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சம்பவத்தினை உறுதி செய்துள்ளன.
கொரோனா வைரஸினால் ஐரோப்பாவில் ஏற்பட்ட முதல் மரணம் பிரான்ஸ் நாட்டில் பதிவாகியிருந்தது.
லத்தீன் அமெரிக்கா:
இத்தாலி நாட்டிற்கு பயணம் செய்த பிரேசில் நாட்டு பிரஜை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுவே லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றில் பதிவான முதல் கொரோனா வைரஸ் தொற்று சம்பவமாகும்.
மத்திய கிழக்கு நாடுகள்:
மத்திய கிழக்கு நாடுகளிலும், சீனாவுக்கு அடுத்ததாகவும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவும் நாடாக ஈரான் கருதப்படுகிறது. இதுவரையில் சீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பெரும் சவாலை எதிர்கொண்ட நாடாகவும் ஈரான் கருதப்படுகிறது. இதனால் பல நாடுகள் ஈரானுடனான போக்குவரத்து தொடர்புகளை தற்காலிகமாக கட்டுப்படுத்தியுள்ளன. ஈரானில் இதுவரையில் 139 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய அரபு இராச்சியம் ஈரானுக்கான தனது விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டது. பாக்கிஸ்தான் ஈரானுடனான போக்குவரத்து எல்லை நுழைவாயில்களை தற்காலிகமாக மூடிவிட்டது.
தென் கொரியா:
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ள நாடுகள் வரிசையில் தென் கொரியாவும் அடங்குகிறது. தென் கொரியாவில் இதுவரையில் 1200 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு குறைந்தபட்சம் 12 மரணங்கள் பதிவாகியுள்ளன.