உசைன் போல்டின் சாதனையை இந்திய கிராமத்து இளைஞன் ஒருவர் முறியடித்த செய்தி இணையத்தில் வலம்வருகிறது.
ஸ்ரீனிவாச கெளடா எனப்படும் கர்நாடக இளைஞன் கம்பாலா எனப்படும் எருமை மாடுகளை ஒட்டிச் செல்லும் பந்தயத்தில் 142.50 மீட்டர் தூரத்தை 13.62 வினாடிகளில் கடந்துள்ளார்.
ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஸ்ரீனிவாச கெளடாவின் வேகம் உசைன் போல்டின் சாதனை வேகத்தையும் முறியடித்துள்ளது.
உசைன் போல்ட் சாதனை படைத்த 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை ஓடிமுடிக்க அவருக்கு 9.58 வினாடிகள் தேவைப்பட்டதெனினும், ஸ்ரீனிவாச கெளடாவின் வேகத்துடன் ஒப்பிடும் போது ஸ்ரீனிவாச கெளடா, அந்த தூரத்தை 9.55 வினாடிகளில் கடந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஸ்ரீனிவாச கெளடாவின் இந்த சாதனைக்கு சார்பான மற்றும் எதிரான கருத்துக்களும் தெரிவிக்கப்படுகின்றன. சாதாரண ஓடுபாதை போலன்றி இவர் ஓடியது வயல் போன்ற சேற்று நிலத்தில் என அவருக்கு சார்பாக சிலரும், அவரை மாடு தான் அவ்வளவு வேகத்தில் இழுத்து சென்றதாக மற்றைய சிலரும் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
இந்தியாவில் தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு போல கர்நாடகா மாநிலத்தில் கம்பாலா எனப்படும் எருமை மாடுகளை ஓட்டிச் செல்லும் இந்த பந்தைய விளையாட்டு நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டுக்கு விலங்கியல் ஆர்வலர்களால் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பை போல, இந்த எருமை மாட்டு பந்தயத்திற்கும் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு, இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டிருந்தது. எனினும் பலரது வேண்டுகோளுக்கு இனங்கவும், ஜல்லிக்கட்டுக்கு போலவே இதற்கும் போராட்டங்கள் இடம்பெற்றதால் அப்போதைய காங்கிரஸ் முதல்வரால் இதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.